பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டு இன்று இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அல்லு அர்ஜுனின் கைது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இறந்த பெண் ரேவதியின் கணவர் இதுபற்றி பேசும்போது “என் மனைவியின் இறப்புக்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மனைவி கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததற்கு அவர் என்ன செய்வார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்காக நான் வழக்கை வாபஸ் வாங்கவும் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.