ஏஐ மூலம் எம்ஜிஆர் கேரக்டரை உருவாக்கி, அந்த படத்தில் நான் நடிக்க போகிறேன் என்றும், அந்த படத்தை நானே இயக்கப் போகிறேன் என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் நடித்த 150வது திரைப்படமான "தி ஸ்மைல் மேன்" என்ற படம் விரைவில் வெளியாகும் நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், மீண்டும் இயக்குனர் ஆவது குறித்து கேள்விக்கு பதிலளித்தார்.
"தலைமகன்" என்ற படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த படத்தின் இயக்குனர் திடீரென விலக வேண்டிய சூழல் வந்ததால், நானே அந்த படத்தை இயக்கினேன். மற்றபடி, எனக்கு இயக்குவதில் பெரிய ஆர்வம் இல்லை.
ஆனால் அதே நேரத்தில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து நான் பயணம் செய்வது போன்ற ஒரு கதையை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளேன். இன்னும் ஒரு வருடத்துக்குள் கதை முடிந்துவிடும். அதன் பின்னர், ஏஐ தொழிலின் மூலம் எம்ஜிஆர் கேரக்டரை உருவாக்கி, அதில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளேன்.
எம்ஜிஆருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளப் போகிறேன்," என்றும் தெரிவித்தார்.
இந்த படத்தை அவரே இயக்கி, தயாரிக்க உள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏஐ மூலம் மீண்டும் எம்ஜிஆரைக் காண ஒரு வாய்ப்பு வரப்போகிறது என்ற தகவல், எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.