விழுப்புரம் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாமல் போனது குறித்து உயர்நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும் சூழலில் இத்தனை பிரச்சனைகளையும் மக்கள் மனதில் இருந்து திசை திருப்புவதற்காக குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு இறுதி ஊர்வலம் நடத்துவது, அம்பேத்கர் பெயரை வைத்து அறிக்கை கொடுப்பது என ஆளும் அரசு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறது என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அம்பேத்கர் அவர்கள் ஆரியர்களைப் பற்றியும், இடஒதுக்கீடு மற்றும் மதங்களைக் குறித்தும் கூறியிருக்கும் கருத்துகளைப் புறந்தள்ளிய கட்சிகளும் அதன் தலைவர்களும் எதிர்ப்பு அரசியல் செய்வதற்காக மட்டுமே அவரது பெயரைப் பயன்படுத்துவதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் மூலமாக பெறப்பட்ட பணத்தை பாடநூல் கழகத்தின் மூலமாக வெள்ளையாக்கும் சம்பவம் நடந்திருப்பது பற்றியோ, நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய இரண்டு கிலோ மெத்தபெட்டமைன் காவலர் ஒருவர் மூலமாகவே கைமாற்றப்பட்டது குறித்தோ, 14 கிராமங்களுக்கு வெள்ள நிவாரணம் சரியாகப் போய்ச் சேராமல் மக்கள் போராடுவது குறித்தோ ஊடகங்கள் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் இருப்பதும் ஆளும் அரசு இதைப்பற்றி எந்த விளக்கங்களும் கொடுக்காமல் இருப்பதும் நாட்டு நலனுக்கு எதிரானவை.
விழுப்புரம் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க முடியாமல் போனது குறித்து உயர்நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும் சூழலில் இத்தனை பிரச்சனைகளையும் மக்கள் மனதில் இருந்து திசை திருப்புவதற்காக குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு இறுதி ஊர்வலம் நடத்துவது, அம்பேத்கர் பெயரை வைத்து அறிக்கை கொடுப்பது என ஆளும் அரசு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறது.
ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் பல செய்திகளை மறைத்தாலும், இந்த சமூக ஊடக காலகட்டத்தில் நாட்டில் நிகழும் உண்மைகளை உய்த்துணர்ந்து அரசியல் விழிப்புணர்வோடு செயலாற்றுவது பொதுமக்களின் தலையாய கடமை என்ற கருத்தை உறுதியாக முன்வைக்கிறேன்.