போனா போகுதுன்னு விட்டிருந்தேன் ; ‘ஞானச்செருக்கு’ விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (14:22 IST)
பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஞானச்செருக்கு’. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ‘விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில்  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வ.கௌதமன், பன்னீர்செல்வம், சுப்பிரமணிய சிவா, அஜயன்பாலா, நடிகைகள் மதுமிதா, வசுந்தரா, கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
இந்தபடம் குறித்து தொல்.திருமாவளவன் பேசும்போது, “இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். ஞானச்செருக்கு என்கிற பெயரை இன்னும் சாதாரண தமிழில் சொன்னால் அறிவுத்திமிர் என்று சொல்லலாம். தந்தை-மகன், ஆசிரியர்-மாணவன், தலைவர்-தொண்டன் என ஒவ்வொரு துறையிலும் தலைமுறை இடைவெளி இருப்பது போல சினிமாவிலும் இருக்கிறது. இங்கே வாழ்த்த வந்திருக்கும் மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கும் இந்த படத்தை இயக்கியிருக்கும் தரணி ராஜேந்திரனுக்கும் இருக்கும் இடைவெளி கூட தலைமுறை இடைவெளிதான். இதைத்தான் இந்தப்படத்தில் கருப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தரணி ராஜேந்திரன். காதல், டூயட், குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி என எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கதையின் கருப்பொருளே ஓவியர் வீர சந்தானம் தான். ஓவியர் வீர சந்தானத்துடன் போராட்டக் களங்களில் நான் கைகோர்த்து நின்றவன்.. என்னுடைய புத்தகங்களுக்கு அவரது ஓவியங்களை வழங்கி அலங்கரித்திருக்கிறார். மிகச்சிறந்த ஈழ உணர்வாளர். தரணி ராஜேந்திரன் யாரும் உணர முடியாததை உணர்ந்திருக்கிறார். யாரும்  தொடமுடியாத ஒரு விஷயத்தை தொட்டிருக்கிறார். யாரும் விவரிக்க முடியாத ஒரு விஷயத்தை விவரித்திருக்கிறார். இதுவே அவருக்கு உள்ள ஞான வலிமையை காட்டுகிறது. 
 
இன்றைய தலைமுறையினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த நம்மை போன்றவர்களால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிந்திக்க முடியாது. அப்படியே தெரிந்தாலும் புரிந்தாலும் அவர்களுக்கு ஏற்ப இணங்க முடியாது இது ஒரு உளவியல் சிக்கல். இதுதான் தலைமுறை இடைவெளி என்பது. இசைஞானி இளையராஜாவின் இசையை  25 ஆண்டுகளுக்கு மேலாக உலகமே கொண்டாடிக்கொண்டிருந்தபோது ஏ.ஆர் ரகுமான் என்பவர் வந்தார் உலகம் ரகுமானை சுற்றிக் கொண்டது ஏன் இளையராஜாவால் இந்த தலைமுறைக்கு ஏற்ப இசையை வழங்க முடியாதா..? அது அவருக்கு தெரியாதா என்கிற கேள்வி எழும்.. ஆனால் அதற்கு விடை சொல்ல முடியாது. அதேபோலத்தான் இங்கே இருக்கிறார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன். அவரால் இதுபோன்ற படத்தை இயக்க முடியாதா என்றால் அந்த கேள்விக்கு விடை தெரியாது. இந்த படத்தின் நாயகனும் இதுபோன்ற ஒரு தலைமுறை இடைவெளியில் சிக்கிக்கொண்டவர் தான். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. 
 
இந்த படத்தை பார்த்த பாரதிராஜா நான் எடுக்க வேண்டிய படத்தை எடுத்திருக்கிறாய் என இயக்குநரை பாராட்டியதாக சொன்னார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி, இந்த முப்பது வயது இளைஞர், பாரதிராஜா, எஸ்பி முத்துராமன் போன்ற முதுபெரும் இயக்குனர்களின் சிந்தனைக்கு மாறி அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். மிகச்சிறந்த படைப்பாளிக்கு வெற்றி தோல்வி ஒரு பொருட்டே அல்ல. 
 
சில படங்களைப் பார்க்கும்போது இந்த படத்தில் ஒன்றுமே இல்லை இதெல்லாம் எப்படி ஓடுகிறது என கேள்வி எழும். ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்தபோது அவரது படத்தை பார்த்தவர்கள் ஆள் பார்க்கவே கலராகவும் இல்லை, எம்ஜிஆர் மாதிரி பளபளப்பாகவும் இல்லை. ஆனால் படம் எப்படி ஓடுகிறது என்கிற கேள்வி எழுந்தது ஆனால் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோர் இதையெல்லாம் மாற்றினார்கள். தரணி இராஜேந்திரன் இந்த இளம் வயதில் மிகுந்த முதிர்ச்சியடைந்த பார்வையை கொண்டிருக்கிறார். அருமையான ஒரு கதையை கருப்பொருளாக தேர்வு செய்திருக்கிறார். இளம் இயக்குனர்கள் எதிர்பார்க்காத ஒன்றை எண்ணிப்பார்த்து முற்போக்கு சிந்தனையுடன் இதை அணுகியிருக்கிறார்” என்று பாராட்டினார். 
 
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “நல்லவர்களை கொண்டாட மறுக்கும் இந்த உலகம் அதிகாரத்தில் உயர்ந்தவர்களை, பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களை கொண்டாடுகிறது. ஆனால் இந்தப்படம் நமக்காக போராடிய ஒருவரை கொண்டாடும் படமாக உருவாகியிருக்கிறது. முதல் பெஞ்சில் இருக்கும் மாணவர்களையே கொண்டாடிக்கொண்டிருந்தால் கடைசியில் இருப்பவர்களை கவனிப்பது யார்.? அதனால் வீர சந்தானம் போன்ற மனிதர்களைப் பற்றி மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் இதுபோன்ற படங்களை அரசாங்கமே தயாரிக்கவேண்டும். அதுதான் சிறந்தது” என தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்தார். 
 
நடிகை கோமல் சர்மா பேசும்போது, “மறைந்த இயக்குனர் மணிவண்ணன் கடைசி படமாக இயக்கிய அமைதிப்படை-2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.. அப்போது உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த அவரை பார்க்க சென்றபோது அந்த நிலையிலும் கூட படத்தின் எடிட்டிங் பணிகளை ஈடுபட்டிருந்தார். அப்படி ஒரு கலைஞரிடம் சினிமா கற்றுக்கொண்ட நான், வீர சந்தானம் நடித்த இந்தப்படத்தின் டிரெய்லர் காட்சிகளைப் பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். இந்த உலகிற்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்.. தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்” என அழகு தமிழில் பாராட்டுக்களை வெளிப்படுத்தினார் 
 
நடிகை வசுந்தரா பேசும்போது, “இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்தை எடுப்பதற்கு இயக்குனர் தரணி ராஜேந்திரன் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை  கேள்விப்பட்டேன். எந்த ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுக்கும்போதும் ஏதோ ஒரு வகையில் தடங்கல்கள் வந்து கொண்டேதான் இருக்கும். இதுபோன்ற படங்களை வெறும் விருது படமாகவே நாம் பார்க்கிறோமே தவிர, அதற்கான கமர்சியல் வெற்றி என்பது கிடைப்பது இல்லை. வீர சந்தானம் போன்ற ஒரு மகா கலைஞனை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தின்  நிகழ்வில் கலந்து கொண்டது எனக்கு பெருமை” என கூறினார்
 
நடிகை மதுமிதா பேசும்போது, “வீர சந்தானம் ஐயாவை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நெடுநல்வாடை, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட சில படங்கள்  சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய அளவில் கவனம் ஈர்த்தன. ஆனால் அது போன்ற நல்ல படங்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியவில்லை. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அடுத்து மிகப் பெரிய அளவில் படம் எடுக்கும் அளவிற்கு லாபம் சம்பாதிக்க முடியவில்லை. தமிழக அரசும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இதற்கு ஏதாவது செய்யவேண்டும்” என கோரிக்கை வைத்தார்
 
இயக்குனர் வ.கௌதமன் பேசும்போது, “ஒரு கலைஞன் அவன் உயிரோடு இல்லாத நிலையில் அவருக்காக நடத்தப்படும் இதுபோன்ற ஒரு பெரும் கூட்டம் தான் வீர சந்தானம் போன்ற ஒரு கலைஞனுக்கு நாம் செய்கிற மரியாதையாக இருக்கும். வீர சந்தானம் எல்லார் மீதும் பற்று வைப்பார். எல்லார் மீதும் கோபம் கொள்வார். அவரைப் பார்த்து பயப்படாத அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த அளவுக்கு அவர் மீது மரியாதை கொண்ட அரசியல்வாதிகள் நிறைய இருக்கின்றனர். இளம் கலைஞர்களை அவர் போல பாராட்டுவதற்கு ஆளே இல்லை. நான் இயக்கிய சந்தனக்காடு தொடரை மேதகு பிரபாகரன் விரும்பி பார்க்கிறார் என்கிற தகவலையும் வீர சந்தானம் தான் எனக்கு சொன்னார்.  வீர சந்தானம் நடித்த இந்த படத்திற்கு ஞானச்செருக்கு என தலைப்பு வைத்தது மிகப்பொருத்தமான ஒன்று. 
 
லயோலா கல்லூரி மாணவர்களுக்காக வேட்டி என்கிற ஒரு சுதந்திர போராட்ட தியாகி பற்றிய சிறுகதையை குறும்படமாக எடுக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரத்தில் வீர சந்தானம் நடித்திருந்தார். வீட்டை விட்டு வெளியே சென்றாலே குளிர் ஜுரம் வந்துவிடும் என்கிற நிலையில் இருந்த அவரை இந்த குறும்படத்திற்காக குளத்தில் மூழ்கி குளிக்க வைத்து படமாக்கினேன். இதில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதே இறுதிக்காட்சியில் நான் எழுதிய ஒரு வசனத்திற்காகத்தான்.  அந்த அளவிற்கு இந்த சமூகத்திற்கு ஒரு படைப்பு தேவைப்படுகிறது என்றால் தனது உடல்நிலையை கூட கவனத்தில் கொள்ளாமல் கலையை நேசித்தவர் வீர சந்தானம். வள்ளுவருக்கு காவி சாயம் பூச சிலர் நினைத்தபோது இதே வீரசந்தானம் இருந்திருந்தால் அவரை வள்ளுவாராக மாற்றி, காவி சாயம் பூச நினைத்தவர்களுக்கு ஒரு யானை மீதி கொடுக்கலாம் என நினைத்திருந்தேன் அப்போதுதான் அவர் நம்முடன் இளையே என்கிற வருத்தம் ஏற்பட்டது“ என்று கூறினார்.
 
படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசும்போது, “ஞானச்செருக்கு படம் மூலமாக ஓவியர் வீரசந்தானம் மீண்டும் பிறந்தது போன்ற உணர்வை நீங்கள் உணரலாம். இந்த படம் வெளியான பின்பு வீரசந்தானம் என்பவர் யாரென எல்லாராலும் தேடப்படுவார். இப்படிப்பட்ட ஒரு ஆளுமை கொண்ட நபரை தெரிந்து கொள்ளாமலேயே போய்விட்டோம் என தமிழ் சமூகமே வெட்கப்படும். இந்த படத்தை பார்த்த பலரும் இதில் கமல், ரஜினி நடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறினார்கள். ரஜினியை விட கமலை விட எல்லா விஷயத்திலும் வீரசந்தானம் ரொம்பவே உயர்ந்தவர். இதை ஓபன் ஆகவே நான் கூறுகிறேன். 
 
இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அனைவருமே  சம்பளம் எதுவும் வாங்கிக் கொள்ளாமலே நடித்தனர். ஓவியர் வீரசந்தானம் கூட ஒரு கட்டத்தில் என்னை அழைத்து இந்த படத்திற்காக எனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க நினைத்திருந்தால் அதையும் இந்த படத்திற்காக பயன்படுத்திக் கொள் என்று பெருந்தன்மையுடன் கூறினார். இந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் மிக நேர்த்தியாக உருவாகி இருந்ததால்தான் சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டி போட முடிந்தது. அதற்காக இது ஒரு விருது படம் என்று நினைத்துவிட வேண்டாம். நான் விருதுக்காக படம் எடுப்பவன் அல்ல. மக்களுக்காக படம் எடுப்பவன். அதேசமயம் நம் படத்தை வெளிநாட்டுக்காரன் பாராட்டி அதற்கான ஒரு அங்கீகாரத்தை தரும்போது தான் இங்கே உள்ளூரிலும் கவனிக்கப்படுகிறது என்பது ஒரு வருத்தமான விஷயம். இந்தப்படம் வெளியான பின்பு கருத்து ரீதியாக விமர்சனங்களையும் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்” என்றார்.
 
விழாவின் இறுதியில் முத்தாய்ப்பாக பேசிய மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, “ஞானச்செருக்கு என்கிற இந்த படம் படைப்பாளர்களின் செருக்கு என்றுதான் சொல்வேன். இந்த செருக்கு எல்லாம் எங்களுக்கு இருந்தது இல்லை. ஆனால் இந்த பையன்களுக்கு இருக்கிறது. இதை பாராட்டத்தான் இந்த விழாவிற்கு வந்து இருக்கிறேன். இந்த படத்தின் கதைநாயகன் அதாவது வீர சந்தானம் நடித்துள்ள கதாபாத்திரம் இயக்குநராகவும் நடிகராகவும் இருந்து வெற்றி பெற்று பின்னர் ஓய்வு பெற்றவர். ஓய்வுபெற்ற பின்பும் நான் சும்மா இருக்க வேண்டுமா என நினைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என லட்சியத்துடன் புறப்பட்டு தனது துறையில் மீண்டும் சாதிப்பது தான் இந்த படத்தின் கதை. 
 
இங்கு எல்லோரும் பேசும்போது தலைமுறை இடைவெளி பற்றி சொன்னார்கள். எனக்கு இப்போது பிறந்த தேதிப்படி 85 வயதாகிறது. உடல் ஆரோக்கியத்தின் படி எனக்கு வயது 55. என் மனதின் படி வயது 35. இந்த இளைய தலைமுறை படைப்பாளிகளை பார்க்கும்போது வந்த சந்தோசத்தில் என் வயது 18 ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்தபிறகு, இதில் நடித்துள்ள வீர சந்தானத்தை பார்த்த பிறகு மீண்டும் ஒரு முறை வரவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. வயதாகிவிட்டது என்று சுருண்டு படுத்து விடாதே மீண்டும் எழுந்து செயல்படு என தூண்டும் விதமாக இந்த படத்தின் கருத்து அமைந்திருக்கிறது. இவர்கள் இன்று செய்யும கிராபிக்ஸ் வேலைகளை எல்லாம் நான் அன்றே செய்துவிட்டேன். அப்படியென்றால் இப்போது கிராபிக்ஸை வைத்துக்கொண்டு நான் எந்த அளவிற்கு வேலை செய்வேன்..? ஏதோ போனால் போகிறது என விட்டு வைத்திருக்கிறோம். ஆனால் இந்த படம் மீண்டும் என்னை உற்சாகமாக வேலை செய்யும் இலட்சியத்திற்கு தூண்டியுள்ளது” என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்