கிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெளியானது கேப்ரியலின் பேச்சு !

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (10:28 IST)
மைதானத்தில் அருவக்கத்தக்க வகையில் ஓரினச்சேர்க்கைக் குறித்து வசைபாடி 4 போட்டிகளில் தடை பெற்றுள்ள மேற்கிந்திய வீரர் இப்போது தான் என்னக் கூறினேன் என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
 

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கேப்ரியல் ஷனன், பேட் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை நோக்கி கேலி செய்யும் விதமாகப் பேசியுள்ளார். அப்போது ஓரினச்சேர்க்கைக் குறித்த இழிவான சில வசைகளையும் அவரிடம் கூறியுள்ளார். அதற்கு நிதானமாக பதிலளித்த இங்கிலாந்து கேப்டன் ரூட் ‘ஓரினச்சேர்க்கை ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை. அதனைக் கேலி செய்யாதீர்கள்’ எனக் கூறினார்.

இதில் ஜோ ரூட் சொன்ன விஷயம் ஸ்டம்ப் மைக்குகளில் தெளிவாகக் கேட்டுள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கேப்ரியல் என்னக் கூறினார் என்பது மைக்கில் கேட்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி அதிகாரிகள் கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை மற்றும் போட்டி ஊதியத்தில் 75 சதவீதப் பிடித்தம் ஆகியத் தண்டனைகளை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து இவ்வளவுக் கடுமையானத் தண்டனைகள் கொடுக்கும் படி கேப்ரியல் என்னதான் பேசினார் என்பதை அறிந்துகொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அதை இப்போது கேப்ரியலே வெளிப்படையாகக் கூறி வருத்தம்  தெரிவித்துள்ளார். இது குறித்து கேப்ரியலின் விளக்கம் ;-

ஆட்டத்தின் நெருக்கடியான சூழ்நிலையில் இதுபோன்ற சூடான விவாதங்கள் நடைபெறுவது சகஜம்தான். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஜோ ரூட் என்னை உற்றுப்பார்த்தார். அப்போது ‘ நான், ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்.. நீ ஆண்களை விரும்பும் ஓரினச்சேர்க்கையாளனா ? எனக் கேட்டேன். அதற்குப் பதிலளித்த ரூட் ‘ ஓரினச்சேர்க்கையாளனாக இருப்பது ஒன்றும் குற்றமில்லை. அவர்களைப் பற்றி வசைபாடாதே என்றார்’ அதற்குப் பதிலளித்த நான் ‘ அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை…ஆனால் என்னை அப்படிப் பார்க்காதே’ எனக் கூறினேன்.

ஜோ ரூட் இந்த விவகாரம் குறித்துப் புகார் அளிக்காவிட்டாலும் ஐசிசி தானாகவே விசாரித்து இந்த தண்டனையினை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்