2016 தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகர்கள்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (14:25 IST)
2016 -இல் கமல், அஜித் நடித்த படங்கள் வெளிவரவில்லை. மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தன. இதில் யார்  இன்னமும் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர்?

 
ரஜினி
 
ரஜினியின் கபாலி திரைப்படம் தமிழகத்தை சுனாமியைப் போல் தாக்கியது. முதல் நாள் முதல்காட்சி டிக்கெட்டுகளை கார்ப்பரேட்  கம்பெனிகள் இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கு அள்ளியதில் சாமானிய ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடினர்.  அரசும், அரசு எந்திரமும் விழித்திருக்க ஒரு மாபெரும் சுரண்டல் அரங்கேறியது. ஏன் இதனை சுரண்டல் என்கிறோம் என்றால்  ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு டிக்கெட் விற்ற திரையரங்கு உரிமையாளர்களே பல இடங்களில் சொற்ப லாபத்தை மட்டுமே பெற  முடிந்தது. ரஜினி ஆல்டைம் சூப்பர் ஸ்டார் என்பதை கபாலி சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்தது.
 
விஜய்
 
வருடத்துக்கு ஒரு படம் என்று பக்கா திட்டத்துடன் செயல்படுகிறார் விஜய். தமிழ்ப் புத்தாண்டில் வெளியான இவரது தெறி  பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளியது. விஜய் படம் என்றால் புதுமையான கதை எதுவும் தேவையில்லை. பார்த்து பழகிய  கதையாக இருந்தாலும் சலிப்படைய வைக்காமல் சொன்னால் படம் ஹிட் என்பதை தெறி நிரூபித்தது.
 
சூர்யா
 
சூர்யாவின் பிசினஸ் படத்துக்குப் படம் குறைகிறது. அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி படங்களின் தோல்விக்குப் பிறகு இந்த  வருடம் ஒரேயொரு படம், 24 வெளியானது. படத்திற்கு அபாரமான ஓபனிங் கிடைத்தாலும் நான்காவது நாளே படம் சுருண்டது. ஈர்ப்பில்லாத காட்சிகளும் நம்ப முடியாத நிகழ்வுகளும் படத்தை குப்புற தள்ளின. சூர்யா தனது வழக்கமான நடிப்புப் பாணியை  மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் எப்போதோ கடந்துவிட்டது. கதையும், காட்சிகளும் சிறப்பாக இருந்து ரசிகர்களை கேளிக்கைப்படுத்தினால் தவிர சூர்யா படத்துக்கு ஆளில்லை என்பதை திரும்பச் சொன்ன படம், 24.
 
கார்த்தி
 
பெரும் பொருட் செலவில் தயாரான காஷ்மோராவும், தோழா படமும் கார்த்தி மீது இன்னும் நம்பிக்கை மீதமுள்ளதை  உணர்த்தின. எந்த வேடத்தையும் அனாயாசமாக செய்யும் திறமை கார்த்திக்கு இருக்கிறது. நல்ல கதையும், கதாபாத்திரமும்  அமைந்தால் கார்த்தி இன்னும் உயரங்களை தொடுவார் என்பதை 2016 படங்கள் சொல்கின்றன.
 
தனுஷ்
 
தொடர் தோல்விகளுக்குப் பின் வந்த தொடரி தோல்வி. அதற்கு பிரபுசாலமனும் அவரது கதை, திரைக்கதையும்தான் காரணம்.  அதன் பிறகு வந்த கொடி தனுஷ் மீதான நம்பிக்கையை துடைத்து பளபளப்பாக்கியது. அரசியல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அனுபவ முதிர்ச்சியுடன் சொல்லியிருந்தால் படம் ஹிட்டடித்திருக்கும். நடிப்பைப் பொறுத்தவரை தனுஷை கொடி புதுப்பித்தது  எனலாம்.
 
விக்ரம்
 
விக்ரம் தப்பிப் பிழைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். சொதப்பலான கதை, திரைக்கதை இருந்தும் இருமுகன் வெற்றி  பெற்றது ஆச்சரியம். விக்ரமின் இரண்டுவித கெட்டப்புகளில் வில்லன் லவ் கதாபாத்திரம் உண்மையில் பொறுமையை  சோதித்தது. கெட்டப் இல்லாமல் விக்ரமால் ஒரு கமர்ஷியல் படத்தில் நடித்து அதனை வெற்றி பெற செய்ய முடியுமா? காதல்  காட்சிகளுக்கு இனி அவர் சரிவருவாரா என்ற பல கேள்விகளை இருமுகனும் எழுப்பியிருக்கிறது.
 
சிம்பு
 
படங்களை இழுத்தடிப்பதில் வல்லவரான சிம்புவின் இது நம்ம ஆளு படத்துக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு படம்  வெளியான பிறகு இல்லை. மூன்று தினங்களுடன் எதிர்பார்ப்பு எகிறி பெட்டிக்குள் போனது படம். அச்சம் என்பது  மடமையடாவில் சிம்பு வலிமையாகவே வெளிப்பட்டார். இரண்டாவது பாதி திரைக்கதையில் கௌதம் சொதப்ப, படம்  கவிழ்ந்தது. பொறுப்பாக நடித்தால் சிம்பு என்ற நடிகருக்கு சிறப்பு அதிகமிருக்கு என்பதையே இந்த வருட படங்கள் சொல்லாமல்  சொல்கின்றன.
 
விஷால்
 
பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு விஷால் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். பாயும் புலியின் படுதோல்வியை இந்த வருடம்  வெளியான கதகளியால் தடுக்க முடியவில்லை. படம் சுமாராகவே போனது. முத்தையா இயக்கத்தில் வெளிவந்த மருது  முதலுக்கு மோசமில்லை. ஆக்ஷனில் சோபிக்கிற விஷாலால் காதல், காமெடியில் கால் கிணறுகூட தாண்ட முடியாதது பெரும்  சோகம்.
 
சிவகார்த்திகேயன்
 
வர்த்தகரீதியில் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை சிவகார்த்திகேயன்தான் என்று. பல  மாதங்கள் பெட்டிக்குள் இருந்த பிறகும் ரஜினி முருகன் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதேபோல் ரெமோவும் கல்லாவை  நிறைத்தது. சிவகார்த்திகேயன் படம் என்றால் அஜித், விஜய் படங்களுக்கு தரும் பணத்தை தர விநியோகஸ்தர்களும்,  திரையரங்கு உரிமயாளர்களும் தயாராக உள்ளனர். ஆனால், ஒரே போலிருக்கும் சிவகார்த்திகேயனின் காமெடி மற்றும்  ரொமான்டிக் நடிப்பு இன்னும் எத்தனை படங்களுக்கு தாக்குப் பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
விஜய் சேதுபதி
 
சேதுபதி, றெக்க, இறைவி, காதலும் கடந்து போகும், தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என்று இந்த வருடம் மட்டும் ஆறு  படங்கள். ஆறிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வேடங்கள். எந்த வேடமாக இருந்தாலும் அலட்டாமல் அந்த  பாத்திரமாகவே மாறிவிடும் விஜய் சேதுபதியின் படங்கள் சிவகார்த்திகேயன் படங்கள் போல் வசூலிப்பது இல்லை என்றாலும்,  நம்பி படம் பார்க்கலாம் என்ற ஐஎஸ்ஐ முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறார். அந்தவகையில் இந்த வருடத்தின்  நம்பிக்கை நாயகனாக விஜய் சேதுபதியை சொல்லலாம்.
அடுத்த கட்டுரையில்