நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என முன்பு செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தாமதமாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரமோ அல்லது இரண்டாவது வாரமோ படப்பிடிப்பு தொடங்கும் என பரவலாக பேசப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், கமல்ஹாசன் அதில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளார். ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்பதால், ஆகஸ்ட் முதல் வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பில்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில்தான் கமல்ஹாசன் - அன்பறிவ் படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், அதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த படத்திற்கான நட்சத்திர தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு ஆகியவை முழுமையாக முடிந்துவிட்டதாகவும், கமல்ஹாசன் தேதி கொடுத்தவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.