வீட்டில் திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பகுதியை அடுத்த பரமேஸ்வர மங்கலம் என்ற பகுதியில் இன்று அதிகாலை ஒரு நபர் வீட்டில் திருட முயன்ற போது, அவரை பொதுமக்கள் தற்செயலாக பார்த்து, அடித்து உதைத்துள்ளனர்.
இதில், அந்த நபர் பலத்த காயமடைந்த நிலையில், காவல்துறையினர் இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடமிருந்து அந்த இளைஞரை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகள், படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சோதனை செய்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபர் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பதும், அவரது வயது 24 என்பதும் தெரியவந்துள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் பிடித்து, அவர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.