திமுக குடும்ப கட்சிதான்: அடித்து சொல்லும் மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (22:08 IST)
திமுக தலைவர் கருணாநிதியை அடுத்து அவரது மகன் மு.க.ஸ்டாலின் புதிய தலைவராக சமீபத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் கருணாநிதியின் இன்னொரு மகன் அழகிரி திமுகவில் மீண்டும் சேர முயற்சித்து வருகிறார். மேலும் கருணாநிதியின் மகள் கனிமொழியும் திமுகவின் முக்கிய புள்ளியாக உள்ளார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கும் கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுகவை குடும்ப கட்சி என அதிமுக உள்பட பல கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. இந்த விமர்சனத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தி.மு.க.வை சிலர் குடும்ப கட்சி என்று விமர்சனம் செய்யும்போது, அவர்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொள்வேன். இது குடும்ப கட்சி தான். குடும்பம் குடும்பமாக லட்சோப லட்சம் குடும்பங்கள் கட்சி விழாவில் பங்கேற்கிற பெருமைமிகு தொண்டர்களை இந்த இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கத்தில் காண முடியும்?. தி.மு.க.வை நிறுவிய பேரறிஞர் அண்ணா அற்புதமான அந்த உணர்வை விதைத்தார். தி.மு.க.வை கட்டிக்காத்த தலைவர் கருணாநிதி அந்த உணர்வை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தார்.

மூன்று தலைமுறையாக நாங்கள் தி.மு.க. குடும்பம் என்று சொல்லிக்கொள்வோர் நெஞ்சில்தான் எத்தனை பெருமிதம். என் தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா, நானும் என் உடன்பிறந்தோரும் தி.மு.க.வினர்தான் என்று பெருமைப்படக்கூடிய தொண்டர்களைக் கொண்ட இயக்கம் இது. தமிழ்நாட்டில் வாழ்வோர் அனைவரையும் தன் குடும்பமாக நினைக்கின்ற இயக்கம். உலகில் வாழும் தமிழர்களை எல்லாம் உடன்பிறப்புகளாகக் கருதிப் போற்றுகிற இயக்கம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்