தமிழக அரசியலை பொருத்தவரையில் சினிமாக்காரர்கள் இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது கடந்த 50 ஆண்டுகால வரலாறு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல் கருணாஸ் வரை அரசியலிலும் சினிமாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் விரைவில் வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவும், அரசியல் கட்சிகள் சினிமாக்காரர்களை இழுக்க முயற்சித்து வருகின்றன.
திமுகவை பொருத்தவரை கருணாநிதி உடல்நலமின்றி இருப்பதால் சினிமாக்காரர்களை கட்சியின் பக்கம் இழுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான் உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.
இப்போதைக்கு பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் தேர்தல் நேரத்தில் பாஜகவுடன் ரஜினி கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு, நக்மா உள்பட பல சினிமா நட்சத்திரங்க்கள் உள்ளனர்.
இந்த நிலையில் அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமாகத்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 1ஆம் தேதி தனது டுவிட்டரில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்