கணவன் சத்தியத்தை மீறியதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (11:08 IST)
சென்னை அருகே கணவன் குடிக்க மாட்டேன் என்று மனைவியிடம் செய்த சத்தியத்தை மீறியதால், விரக்தியடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருவொற்றியூர், இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (32). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (28). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு கிஷோர் (5), பிரஷீத் (2) என்ற மகன்கள் உள்ளனர். சுரேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சுரேஷ் நான் இனிமேல் சத்தியமாக குடிக்க மாட்டேன் என மனைவி சங்கீதாவிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறுது சடங்கு ஒன்றில் பங்கேற்ற சுரேஷ், நண்பர்களின் தொடர் வற்புறுத்தலால் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விரக்தியடைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் துக்கம் தாளாமல், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த அக்கம் பக்கத்தினர், காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதைக்காக மருத்துவனையில் அனுமதித்தனர். தாய், தந்தை இருவரையும் இழந்து குழந்தைகள் நடுரோட்டில் பரிதவிக்கின்றன. குழந்தைகள் இருவரும் தாய், தந்தையைப் பார்த்து கதறியது அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்தது.  பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க, அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கவும், விழிப்புணர்வு நடத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்