வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
வங்கக்கடலில் டிசம்பர் 15 ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று அறிவித்ததற்கேற்ப, நேற்று அந்த சுழற்சி உருவாகியுள்ளது. இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், இன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்குப் பகுதிக்கு நகரும் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை, அதாவது டிசம்பர் 17 ஆம் தேதி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.