அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Siva

ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (17:12 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெற்கு அந்தமான் கடல், அதன் அருகிலுள்ள பகுதிகளையும் சுற்றி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த இரண்டு நாட்களில் நகரக்கூடும்.

மாலத்தீவு-லட்சத்தீவு பகுதிகளில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று அதே இடத்திலேயே நிலைத்திருக்கின்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

இன்று தமிழ்நாட்டின் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 35-45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோமீட்டரை எட்டக்கூடும். அதேபோல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலிலும் இதேபோன்ற சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது.

எனவே மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்