ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

Siva

திங்கள், 28 ஜூலை 2025 (16:53 IST)
டெல்லியைச் சேர்ந்த 62 வயது ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர், ஆன்லைனில் தூக்க மாத்திரைகளை வாங்க முயற்சித்தபோது, 'டிஜிட்டல் கைது' மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ரூ. 77 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நீரு என்ற அந்த மூதாட்டி, தனது நரம்பியல் பிரச்சனைக்காக தினமும் ஒரு தூக்க மாத்திரையை எடுத்துக்கொள்வது வழக்கம். அதன்படி, ஒருமுறை அவர் ஆன்லைனில் தூக்க மாத்திரைகளை ஆர்டர் செய்தபோது, அவருக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒருவரிடமிருந்து திடீரென அழைப்பு வந்துள்ளது.
 
அந்த அழைப்பை எடுத்ததும், "நீங்கள் போதைப்பொருள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளீர்கள். உங்களை 'டிஜிட்டல் கைது' செய்கிறோம். உங்கள் வங்கி கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும்" என்று கூறி, உடனடியாக மூன்று லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இல்லாவிட்டால் நேரில் வந்து கைது செய்வோம் என்று மிரட்டியதால், வேறு வழியில்லாமல் நீரு அந்த கணக்கிற்கு மூன்று லட்சத்தை அனுப்பியுள்ளார்.
 
அதன் பிறகு, மீண்டும் மீண்டும் பணம் கேட்ட நிலையில், பல்வேறு தவணைகளில் நீருவின் கணக்கிலிருந்து மொத்தமாக ரூ. 77 லட்சம் பறிபோனது.
 
பிறகுதான் இது ஒரு 'டிஜிட்டல் மோசடி' என்பதை நீரு உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரிடமிருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆன்லைன் மோசடிகளின் புதிய வடிவமான 'டிஜிட்டல் கைது' குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்