முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.. காரணம் என்ன?

Mahendran
திங்கள், 23 டிசம்பர் 2024 (15:46 IST)
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுரேஷ் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேமுதிக கட்சி பொதுச் செயலாளர் எல்.கே. சுரேஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
 
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையடுத்து, அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இருந்தனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சந்திப்புக்குப் பின்னர் எல்.கே. சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது, "விஜயகாந்த் நினைவு தினத்தன்று ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நினைவு தின பேரணி நடத்தப்பட உள்ளது. அதற்கு காவல்துறை அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்களையும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்