தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை ஆர்கே நகர் தொகுதியில் அவரது கட்சி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ஆர்கே நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எல்லா கட்சியையும் முந்திக்கொண்டு முதலில் வேட்பாளர்களை அறிவித்தது தேமுதிக. அந்த கட்சியின் சார்பாக மதிவாணன் ஆர்கே நகரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
வரும் 12-ஆம் தேதி ஆர்கே நகரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 62 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திமுக, அதிமுகவின் இரு அணிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜக போன்ற கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுவரை தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரவில்லை.
இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளார். நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வார்டு வார்டாக அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.