மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் மீதுவழக்கு தொடரப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அதிமுக தலைமை ஊழல் பணத்தை கொடுத்து வைத்திருந்ததாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் அறிக்கைக்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் “அமைச்சர் துரைக்கண்ணு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை அவரது மலிவான அரசியலை காட்டுகிறது. துரைக்கண்ணு சிகிச்சை பெற்ற காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியும் கடைசி காலங்களில் சிகிச்சை பெற்றார் என்பதை நினைவுப்படுத்துகிறேன். மேலும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் குறித்து மருத்துவக்குழு அமைத்து நாங்கள் தீவிர பரிசோதனையும், சிகிச்சையும் அளித்த் வந்தோம்” என கூறியுள்ளார்.
மேலும் ”அரசியல் செய்வதற்கு எவ்வளவோ வழிகள் இருந்தும் மறைந்த அமைச்சரின் இறப்பை வைத்து மலிவான அரசியல் செய்யும் மாண்புமிகு எதிர்கட்சி தலைவரை தமிழகம் பெற்றுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என கூறியுள்ளார்.