மக்கள் பிரச்சனைகள் குறித்து விஜய் பேசுவது வரவேற்கத்தக்கது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவது வரவேற்கத்தக்கது என்றும், விமான நிலையம் அமைப்பதற்கு மாநில அரசு நான்கு இடங்களை தேர்வு செய்தது. அதில் இருந்து இரண்டு இடங்களை மத்திய அரசு தான் தேர்வு செய்தது என்றும் தெரிவித்தார். மேலும், இங்கு அரசியல் செய்வதை விட தமிழக வளர்ச்சியை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தற்போது மற்றொரு காங்கிரஸ் பிரமுகர் விஜய்யின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கூட்டணிகள் இடம் மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.