ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம்…. விபரீத விளைவுகளை உண்டாக்கும் ! - வைகோ எச்சரிக்கை

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (11:09 IST)
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கும் விதமாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்குப் பல கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாக கொண்டிருக்கின்றன. இதனால்தான் ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்திட பா.ஜ.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக முனைந்து செயல்பட்டது. தற்போது இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முன்பைவிட மூர்க்கத்தனமான வேகத்தில் இயங்கத் தொடங்கி இருக்கிறது.

ஒரே தேர்தல்; ஒரே தேசிய கல்விக் கொள்கை; ஒரே சுகாதாரக் கொள்கை; ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே வரி என்பதில் தொடங்கி, தற்போது நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்திற்கு அகரம் எழுதி உள்ளனர்.டெல்லியில் மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறைக் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராம்விலாஸ் பஸ்வான் கூறும்போது, பொதுவிநியோகத் திட்டம் மூலம் இந்தியாவில் 81 கோடி பேர் மானிய விலையில் அத்தியாவசியமான உணவு தானியப் பொருட்களை பெற்றுப் பயன் அடைந்து வருகிறார்கள். நாடு முழுவதும் இந்திய உணவுக் கழகம், மத்திய உணவுக் கழகம், மாநில உணவுக் கழகங்கள் மற்றும் தனியார் உணவுக் கழகங்களின் கிடங்குகளில் சுமார் 61.2 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. உணவு தானியப் பொருட்களை அரசு வாங்குவது முதல் மக்களுக்கு விநியோகம் செய்வது வரை அனைத்தையும் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக்குள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டம் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று மாநிலங்கள் அவையிலும் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுவிநியோகத் திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதனைச் சீர்குலைக்கவும், வட இந்தியாவிலிருந்து புலம்பெயரும் மக்களை ஊக்குவித்துத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றவும், ஏழை - எளிய சாதாரண தொழிலாளர்களுக்கு பொது விநியோக முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பா.ஜ.க. அரசு ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்த்தை அறிமுகம் செய்கிறது. பொது விநியோகமுறை என்பது மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலின் கீழ் வருவதைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதும், அதனைக் கண்காணிப்பதும், முறைகேடுகள் இருந்தால் அவற்றைக் களைந்து, செம்மையாக செயல்படுத்துவதும் மாநில அரசுகளின் முழு முதற் கடமை. இது முழுக்க முழுக்க மாநிலங்களின் நேரடியான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, மத்திய அரசு மூக்கை நுழைப்பது வேண்டாத வேலை. இது மாநிலங்களை நகராட்சிகளைவிடக் கேவலமாக நடத்துவதற்கான சதித் திட்டமாகும்.

மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு பா.ஜ.க. அரசு ‘நிதி ஆயோக்’ வடிவமைத்துத் தருவதை செயல்படுத்த மோடி அரசு துடிப்பது கூட்டாட்சிக் கோட்பாட்டை சீர்குலைப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி ஆகும். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை. பொது விநியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம். இந்தியா முழுவதும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஒரே முறையில் மாற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் நாட்டில் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, மத்திய அரசு ‘ஒரே நாடு; ஒரே ரேசன்’ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குடும்ப அட்டைத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிற தமிழக அரசு, பா.ஜ.க. அரசின் ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஏற்கக் கூடாது. கடுமையாக எதிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்