உங்கள் சின்னம் உதயசூரியன் - அப்செட்டில் விசிக ,மதிமுக ?

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (10:45 IST)
ஸ்டாலினின் நிபந்தனையால் விசிக மற்றும் மதிமுக கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடத்திய திமுக அவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது. அதையடுத்து மதிமுகவுக்கு 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா தொகுதி ஒதுக்கியுள்ளனர். இரண்டு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திருப்தியடைந்தாலும் ஸ்டாலின் விதித்த மற்றொரு நிபந்தனையால் அதிருப்தியடைந்துள்ளனர்.

விசிக மற்றும் மதிமுக ஆகியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சீட்களில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் திமுகவின் சின்னமான உதயசூரியனிலே போட்டியிட வேண்டும் என திமுகக் கூறியுள்ளது. இதற்குத் திருமாவளவன் மறுக்க வைகோவோ டென்ஷனாகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இரண்டுப் பேரையும் சமாதானம் செய்த திமுகவினர் கட்சி நிர்வாகிகளுடன் பேசிவிட்டு பொறுமையாகப் பதில் சொல்லுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

விசிக மற்றும் மதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் தங்களுக்காகத் தனித்தனிக் கொள்கைகள் மற்றும் சின்னம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் சீட்டுக்காகக் கட்சியின் கொள்கைகளை உதறித் தள்ளியதாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் நினைக்கப்பட கூடும் என இருக் கட்சியின் தலைவர்களும் அஞ்சுவதாகத் தெரிகிறது. மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அவர்கள் திமுகவின் எம்.பி.க்களாகவே 5 ஆண்டுக்காலமும் இருக்க நேரிடும். இடைப்பட்ட காலத்தில் அவர்களால் திமுகவிற்கான ஆதரவைத் திரும்பப் பெற இயலாது.

அதனால் இதுதொடர்பாக இன்று இருக் கட்சியின் தலைவர்களும் அந்தக் கட்சி நிர்வாகிகளோடுக் கலந்தாசித்து முடிவை அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்