லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

Mahendran

புதன், 2 ஜூலை 2025 (21:42 IST)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல் விசாரணையின்போது உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அஜித் குமாரின் தாய் மற்றும் தம்பி நவீன் குமாருக்கு ₹2 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.
 
இந்தச் சந்திப்பின்போது விஜய், "உங்களுக்கு எப்போதும் நாங்கள் துணை இருப்போம். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்களது தொடர் ஆதரவை வழங்குவோம். காவல்துறை சித்திரவதையால் யாரும் உயிரிழக்காத வகையில் அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்" என்று உறுதியளித்தார். தொடர்ந்து, அஜித் குமாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
 
அஜித் குமார் வீட்டிற்கு விஜய் வரும் தகவல் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும், விஜய் வந்திருக்கும் செய்தி அந்த பகுதியில் பரவ தொடங்கியதும், அஜித் குமாரின் வீட்டு வாசலில் ஏராளமான மக்கள் கூடத் தொடங்கினர். இதனால், விஜய் பத்து நிமிடங்களுக்குள் அஜித் குமாரின் தாய் மற்றும் தம்பி நவீன் குமாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்தச் சந்திப்பின்போது தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்