யூடியூப் பார்த்து டயட்டில் இருந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Siva

வெள்ளி, 25 ஜூலை 2025 (09:11 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவர் ஒருவர், யூடியூபில் பார்த்து உடல் எடையை குறைக்கும் டயட் முறையை பின்பற்றியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதுபோன்ற முறைகளை பின்பற்றுவதன் அபாயத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்தீஸ்வரர் என்ற பிளஸ் டூ மாணவர், தனது உடல் எடையை குறைக்கும் நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக யூடியூபில் கிடைக்கும் டயட் குறித்த வீடியோக்களை பார்த்து பின்பற்றி வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவர் மூன்று வேளையும் வெறும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில், நேற்று திடீரென சதீஸ்வரருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். யூடியூப் பார்த்து பின்பற்றிய இந்த விபரீதமான டயட் முறைதான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
தற்போது எந்தச் சந்தேகம் என்றாலும் யூடியூபில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், மருத்துவ சம்பந்தமான அறிவுரைகளை, குறிப்பாக டயட் முறைகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகளை மருத்துவரின் நேரடி ஆலோசனை இல்லாமல் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை பார்த்துப் பின்பற்ற வேண்டாம் என்று மருத்துவர்கள் கடுமையாக அறிவுறுத்தி வருகின்றனர்.
 
ஒவ்வொரு நபரின் உடல் தகுதியும், ஆரோக்கிய நிலையும் வேறுபடும். எனவே, உடல் எடையை குறைக்க அல்லது வேறு ஏதேனும் மருத்துவ சிகிச்சை பெற விரும்பினால், முதலில் முழுமையான உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு மட்டுமே, தங்கள் உடல்நிலைக்கு ஏற்ற டயட் மற்றும் சிகிச்சை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்