அமித்ஷா சொல்வதை நான் நம்புகிறேன்.. கூட்டணி ஆட்சி தான்: அடித்து சொல்லும் அண்ணாமலை..

Mahendran

வியாழன், 17 ஜூலை 2025 (15:14 IST)
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் எனது பங்கு எதுவும் இல்லை. இந்தக் கூட்டணியின் போது தலைவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், அதே நேரத்தில், என்னுடைய தலைவர் அமித்ஷா கூட்டணி ஆட்சிதான் என்று சொன்னதை நான் நம்புகிறேன். அப்படி நம்பாவிட்டால் நான் பா.ஜ.க. தொண்டனாக இருக்கவே தகுதி இல்லாதவன்" என்று அண்ணாமலை செய்தியாளர்கள் பேட்டியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
"அமித்ஷா பலமுறை கூட்டணி ஆட்சிதான் என்று உறுதியாக சொல்லி இருக்கிறார். தலைவர்களுக்குள் என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய தலைவர் பேசியதை நான் தூக்கிப் பிடித்து ஆக வேண்டும். அவர் சொன்னதை நான் நம்ப வேண்டும். எனவே, அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று மிக தெளிவாகச் சொன்னதை நான் நம்புகிறேன். அ.தி.மு.க.வுக்கு மாற்று கருத்து இருந்தால், அது குறித்து அவர்களே பேசி முடிவு செய்து கொள்ளலாம்."
 
"ஆனால், அதே நேரத்தில், கூட்டணி ஆட்சி வேண்டும் என்று பா.ம.க. சொல்கிறார்கள். தே.மு.தி.க. , புதிய தமிழகம் கட்சியும் சொல்கிறார்கள். கூட்டணி ஆட்சியை பற்றி இப்பொழுது எல்லா கட்சி தலைவர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்சியின் தலைவர்கள் மட்டும் அமைச்சராக இருப்பதை மற்ற கட்சியின் தலைவர்கள் விரும்புவார்களா? தன்னுடைய கட்சியின் தலைவரும் அமைச்சராக வேண்டும் என்றுதானே அந்தக் கட்சியின் தொண்டர்கள் விரும்புவார்கள்? நான் தொண்டர்களின் குரலாக பேசுகிறேன். என்னுடைய கட்சியில் உள்ளவர்களும் தமிழகத்தில் அமைச்சராக வேண்டும்" என்று அண்ணாமலை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்