கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயன்ற நிர்மலாதேவி என்ற பேராசிரியரின் செய்கையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில் கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்றுவந்த மாணவிகளுக்கு பண ஆசை காட்டி தவறான பாதைக்கு திருப்ப பெண் வார்டன் முயன்றுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வந்துள்ளது.
கோவையில் உள்ள விடுதி ஒன்றில் வார்டனாக புனிதா என்ற பெண் இருந்து வந்தார். இவர் அங்கு தங்கியிருக்கும் மாணவிகள் சிலரை ஓட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார். மேலும் தான் கூறியபடி கேட்டால் ஏராளமான பணம் கிடைக்கும் என்றும் நீங்கள் எல்லோரும் விடுதி பணம் கட்ட தேவையில்லை என்றும், கல்லூரி கட்டணத்தையும் தாங்களே கட்டிவிடுவதாகவும் சாப்பிடும்போது மாணவிகளை புனிதா மூளைச்சலவை செய்துள்ளார். தான் கூறும் ஒருசிலரிடம் உல்லாசமாக இருந்தால் நீங்களும் சொகுசான, உல்லாச வாழ்க்கையை வாழலாம் என்று ஆசை காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே தங்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்க, செய்தி தெரிந்து வந்த பெற்றோர்கள் விடுதி வார்டன் மீது போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் வார்டன் புனிதாவும், விடுதி உரிமையாளரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.