இனி ஆண்டுதோறும் பால் கொள்முதல் விலையை உயர்த்தபோவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்த அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியது. இதனால் பால் விற்பனை விலையும் உயர்ந்தது. ஆவின் பால் 4 ரூபாய் அளவு உயர்ந்ததை தொடர்ந்து பால் பொருட்களான நெய், வெண்ணெய் போன்றவற்றின் விலையும் உயர்ந்தது.
இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு இனி ஆண்டுதோறும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தபோவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். பால் கொள்முதலாளர்கள் கேட்கும்போது மட்டுமே இதுநாள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இனி ஆண்டுதோறும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் புதிய திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.
இதனால் ஆண்டுதோறும் பால் விலையும் உயர்வை சந்திக்குமா என மக்கள் கவலையடைந்து வருகின்றனர். ஆனால் பால் விலை, கொள்முதல் விலை வருடத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுவது வணிக ரீதியாக பால் கொள்முதலுக்கும், ஆவின் நிறுவனத்துக்கும் நன்மை தரும் என்பதாலேயே இந்த புதிய முறை உருவாக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நிர்ணயம் செய்யப்படும் விலையானது தேவைகளை பொறுத்தே உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. பால் விலை உயருமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.