வரும் தேர்தலில் தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்பதாக "அறைக்குள் உட்கார்ந்துகொண்டே கற்பனையில் எழுதுவது தர்மம் அல்ல" என்றும், "இது மாதிரி தேவையில்லாத வீண் வதந்திகளைக் கிளப்ப வேண்டாம்" என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால், அதே நேரத்தில், "சட்டப்பேரவைத் தேர்தலில் 8 தொகுதியில் போட்டியிட்டால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், 10 முதல் 11 தொகுதிகள் வரை கேட்க வேண்டிய நிலை ஏற்படலாம்" என்ற கருத்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், "அ.தி.மு.க.வை திராவிட இயக்கமாக நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என்றும் கூறிய வைகோ, "கலைத்துறையில் இருந்து வந்த விஜய் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார் என்பது மட்டுமே என்னால் கருத்து சொல்ல முடியும்" என்றும் அவர் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
"கிறிஸ்தவ, இஸ்லாமிய ஓட்டுகளை ஒழிக்க நினைக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும், திராவிட இயக்கத்தை பாதுகாக்கும் அரணாக மதிமுக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்துத்துவ சக்திகளை தடுக்கும் நோக்கில், அண்ணா பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் மதிமுக தொண்டர்கள் திரள வேண்டும் என்றும், எங்கள் தொண்டர்களிடம் காசு இல்லை என்றாலும் போஸ்டர், சுவர் விளம்பரங்களைச் செய்து அழைக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.