பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Siva

செவ்வாய், 8 ஜூலை 2025 (16:37 IST)
கர்நாடக மாநிலத்தில், ஒரு இளைஞர் தனது தாய்க்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, பேய் ஓட்டும் பெண்ணிடம் அழைத்து சென்றதாகவும், பேய் ஓட்டும் பெண் தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் அடித்ததில் அந்த தாய் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர், தனது அம்மா கீதம்மா என்பவருக்ப் பேய் பிடித்துள்ளதாக நம்பி, பேய் ஓட்டும் பெண் ஆஷா என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.  பேயை ஓட்ட வேண்டும் என்றால் கீதம்மாவை கம்பால் அடிக்க வேண்டும் என்று ஆஷா கூற, சஞ்சயும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். 
 
அதன்பின் அமானுஷ்ய சக்திகளை விரட்டுவதாக கூறி, பேய் ஓட்டும் பெண் ஆஷா, தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் கீதம்மாவை அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கீதம்மா கதறி அழுதபோதிலும், இரக்கமே இல்லாமல் ஆஷா தொடர்ச்சியாக அடித்துக்கொண்டிருந்தார். அதன் பின் ஒரு கட்டத்தில், கீதம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
 
இதுகுறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், பேய் ஓட்டும் பெண் ஆஷா மற்றும் கீதம்மாவின் மகன் சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்து, இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். பேய் ஓட்டுவதாக மூடநம்பிக்கையில் ஈடுபட்டு பெற்ற தாயை ஆறு மணி நேரம் அடிக்க வைத்த மகனுக்கு, அவருடைய உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்