தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜி.கே வாசன், தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது எனவும் இது சாமானிய மக்களை மிகவும் பாதிக்கும் எனவும் வேதனை தெரிவித்தார்.
ஏற்கெனவே நலிந்துள்ள குறு சிறு தொழில்களை இது மேலும் கடுமையாக பாதிக்கும் என்று அவர் தெரிவித்தார். திராவிட மாடல் அரசு பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையென மாதம் ரூபாய் ஆயிரத்தை வலது கையில் கொடுத்துவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி அந்த தொகையை இடது கையில் பறித்துக் கொள்கிறது என்றும் இது அரசின் தந்திரம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் ஜி.கே வாசன் கூறினார்.
மின் கட்டண உயர்வுக்கு மின்சார வாரியத்தின் கடன் சுமையே காரணம் என்றும் சாக்குப் போக்கு சொல்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போடக்கூடாது என்றும் ஜி.கே வாசன் தெரிவித்தார்