செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (13:09 IST)
பழிவாங்கும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்! என்று பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கான உழவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதைக் கண்டித்து உழவர்களைத் திரட்டி போராட்டங்களை ஒருங்கிணைத்ததற்காக அருள் ஆறுமுகம் என்ற உழவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது; நியாயமற்ற முறையில் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகச் சரியானவை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் தொடர்பான விவரங்கள், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் விசாரணை ஆவணங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் போது சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு எந்த அளவுக்கு அத்துமீறியிருக்கிறது; கருத்துக் கேட்புக் கூட்டங்களில் வெளியூர் ஆட்களை அழைத்து வந்து நிலம் கையகப்படுத்துவதற்கு ஆதரவாக கருத்துக் கூற வைத்தது உள்ளிட்ட மோசடிகள் அம்பலமாகும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது.

சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துடிக்கிறது. செய்யாறு நகரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அரசுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கும் போதிலும் உழவர்களின் நிலங்களை பறிப்பதில் தான் தீவிரமாக இருக்கிறது. அதற்காக பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. தமிழக அரசின் செயலால் செய்யாறு பகுதியைச் சேர்ந்த மக்கள் கொந்தளித்துக் கிடக்கின்றனர்.

மக்களின் உணர்வுகளையும் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். விவசாயி அருள் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்