மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

Senthil Velan
திங்கள், 17 ஜூன் 2024 (12:04 IST)
தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியின் கார் மீது சரக்கு வாகனம் மோதி கொலை செய்ய மணல் கடத்தல் கும்பல் முயற்சி செய்துள்ளது.

மணல் சரக்குந்து மோதியதில் வட்டாட்சியர் பயணித்த மகிழுந்து சேதம் அடைந்த நிலையில், மணல் சரக்கு வாகனத்தை பின்னோக்கி இயக்கி வந்து மீண்டும் மோத மணல் கடத்தல் கும்பல் முயன்றுள்ளது. கார் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு, காரை இடதுபுறமாக திருப்பியதால் கோட்டாட்சியரும், அவரது உதவியாளர்களும் தப்பியுள்ளனர். கோட்டாட்சியர் மீதான கொலைமுயற்சி கண்டிக்கத்தக்கது.
 
தமிழ்நாட்டில் மணல் கடத்தல் கடந்த சில ஆண்டுகளாக தலைவிரித்து ஆடுகிறது. அதிகாரப்படிநிலையில் உயர்ந்த இடத்தில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால் அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
 
ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி சமுக அமைதிக்கும் மிகப்பெரிய ஆபத்து ஆகும். மணல் மாபியாக்களால் தமிழ்நாட்டின் பொது அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதற்கு ஏராளமான எடுத்துக்க்காட்டுகளைக் கூற முடியும்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன்பின் சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலரை வெட்ட கடத்தல் கும்பல் அரிவாளுடன் துரத்தியது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி, கொலை செய்ய முயன்றது.
வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதை படம் பிடித்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உமாபதியை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியது என மணல் கடத்தல் கும்பல்களின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.
 
இப்போதும் கூட இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியரை கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்யவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக கோட்டாட்சியர் மீதான கொலை முயற்சி குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதில் தான் ஆர்வம் காட்டினார்கள்.
 
முறப்பநாட்டில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததைத் தவிர, மணல் கொள்ளையை தடுக்கவும், மாபியாக்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் கடத்தலை தடுக்க முயலும் அதிகாரிகளை கொல்ல முயற்சிகள் நடப்பதை அரசின் மீதான போராகக் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்  என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்