மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!

Siva

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (07:33 IST)
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்பிக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், பாமக எம்பி அன்புமணி வாக்கெடுப்பின்போது வாக்கெடுப்பை புறக்கணித்தார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்த நிலையில், இந்த சட்டத்திருத்தத்தை காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் நேற்று முன்தினம் 288 வாக்குகள் பெற்று மசோதா நிறைவேறியது.
 
இந்த நிலையில், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பி.களும், எதிராக 95 எம்.பி.களும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இந்த மசோதாவுக்கு ஆதரவாக ஜிகே வாசன் வாக்களித்த நிலையில், வாக்கெடுப்பின்போது பங்கேற்காமல் அன்புமணி புறக்கணித்துவிட்டார். அதிமுக எம்.பி.க்களான தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்பட நான்கு எம்.பி.க்களும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.  

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்