பிரேசில் அதிபரின் மனைவி, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை பொதுவெளியில் வைத்து கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதற்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். இந்த எக்ஸ் தளம் பிரேசிலில் போலியான செய்திகள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை தொடர்ந்து அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அந்த குறிப்பிட்ட எக்ஸ் தள கணக்குகளை நீக்குவதுடன், பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படியும் பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை எலான் மஸ்க் பின்பற்றாததால் எக்ஸ் தளம் பிரேசிலில் ஒரு மாத காலம் முடக்கப்பட்டது. இதனால் பிரேசில் அரசுக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட எலான் மஸ்கிற்கு அமெரிக்க அரசில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் எலான் மஸ்க்கை பொதுவெளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடுமையாக விமர்சித்த பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டி சில்வா, அவரை கெட்ட வார்த்தையாலும் திட்டினார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அதற்கு ரிப்ளை செய்துள்ள எலான் மஸ்க் இவர்கள் அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பார்கள் என்று கூறியுள்ளார். தற்போது ஆளும் அமெரிக்க அரசின் நெருக்கமான கூட்டாளியாக மாறியுள்ள மஸ்க், பிரேசில் தேர்தலில் தலையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K