அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

Siva

திங்கள், 14 ஜூலை 2025 (12:48 IST)
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சமீபத்தில் பானிப்பட்டியில் ஒரு பெண் ரயிலுக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்த முக்கிய நடவடிக்கையை ரயில்வே துறை எடுத்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள 74,000 பயணிகள் ரயில் பெட்டிகளிலும் மற்றும் 15,000 ரயில் இன்ஜின்களிலும் கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு கேமராக்கள் - இரண்டு கேமராக்கள் நுழைவு வாயில்களிலும், இரண்டு கேமராக்கள் பொது இடங்களிலும் பொருத்தப்படும். அதேபோல், ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் ஆறு கேமராக்கள் பொருத்தப்படும். இந்த அதிநவீன கேமராக்கள், குறைந்த வெளிச்சத்திலும், அதிவேகப் பயணத்தின் போதும் உயர்தர காட்சிகளைப் படம்பிடிக்கும் திறன் கொண்டவை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம், ரயிலுக்குள் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும், ரயிலில் ஏதேனும் குற்றம் நடந்தால், உடனுக்குடன் அதனைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், ரயில் நிலையங்களில் உள்ள காட்சிகளை நேரடியாக அதிகாரிகள் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்