நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் கட்சி சார்பாக இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் நீண்ட காலமாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்த முன்னேற்பாடுகளில் இருந்து வந்த நிலையில் இறுதியாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார். விஜய் கட்சி தொடங்கியதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பல அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குறிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழற்கள்' அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டி இடாததால் பெரும்பாலும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை விஜய் கட்சியின் சார்பில் ஆதரவு, எதிர்ப்பு அறிக்கைகள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என்று பேசிக் கொள்ளப்படுகிறது.