மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (20:35 IST)
மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு !
கரூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
 
கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பெரிய மாடு, கரிச்சான் மாடு என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாடு பிரிவில் தஞ்சை மாவட்டம் கடம்பங்குடியை சார்ந்த காமாட்சியம்மன் முதல் பரிசையும், திருச்சி மாவட்டம் கிளியூர் சூர்யநாராயணசாமி இரண்டாம் பரிசையும், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் புகழேந்தி 3ம் பரிசையும் பெற்றனர். கரிச்சான் மாடு பிரிவில் தேனி மாவட்டம் கம்பம் பெரியமுத்து முதல் பரிசையும், தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சார்ந்த சாமி பாலாஜி இரண்டாம் பரிசையும், மதுரை மாவட்டம் அட்டுக்குளத்தை சார்ந்த கோமாளி வீரணன் 3ம் பரிசையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், ஓட்டிவந்த சாரதிகளுக்கும் பரிசுத் தொகையும், கேடயமும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்