சென்னையில் உள்ள தனது வீட்டை துப்புரவு தொழிலாளிகள் தாக்கிய சம்பவத்தில் காவல்துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கரின் சென்னை வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் புகுந்து சாக்கடையை கொட்டிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் துப்புரவு பணியாளர்கள் போல சில ரவுடிகள் என பேசியிருந்த சவுக்கு சங்கர், தற்போது அவர்கள் துப்புரவு தொழிலாளர்களை காவல்துறையினர்தான் அங்கு அழைத்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “எனது வீட்டின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடை, மலத்தை கொட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். நான் துப்புரவு தொழிலாளிகளுக்கு எதிராக எதையும் பேசவில்லை. துப்புரவு தொழிலாளர்களுக்கு வாங்கி தர வேண்டிய துப்புரவு வாகனங்கள் விவகாரத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சிலர் ஊழல் செய்திருப்பதாக, துப்புரவு பணியாளர்கள் நலனிற்காகதான் பேசியிருந்தேன்.
நான் இருக்கும் இந்த வீடு 3 மாதங்களுக்கு முன்பு நான் குடிவந்தது. இந்த வீட்டில்தான் நான் இருக்கிறேன் என்பது காவல்துறை தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது. சென்னை மாநகர ஆணையர் அருண் சொன்னதன் பேரில்தான் துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்து என் வீட்டை போலீஸே காட்டியுள்ளனர்” என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சவுக்கு சங்கர் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விரைவில் காவல்துறை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K