கரூர் துயர சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிரபாகரன் செல்வகுமார் என்பவரை, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் மிரட்டி, வழக்கை வாபஸ் பெறப் பணம் மற்றும் அரசு வேலை தருவதாக பேரம் பேசியுள்ளதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
தன் குடும்ப உறுப்பினர்கள் இருவரை இழந்த பிரபாகரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. பேரம் பேசலை மறுத்த பின்னும், பிரபாகரன் வழக்கே தொடராதது போல தவறான செய்தி வெளியானதாகவும் அ.தி.மு.க. புகார் தெரிவித்துள்ளது.
மேலும், தி.மு.க. வழக்கறிஞர் வில்சன், "வழக்கு மோசடியானது" என்று கருத்து திரிக்க முயல்வதாக அ.தி.மு.க. விமர்சித்துள்ளது. வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும் தாயாருக்கும் பாதுகாப்பு கோரியுள்ள நிலையில், அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. எச்சரித்துள்ளது.