பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்திப்ராய் ரத்தோர், அதிரடியாக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-ஆக இருந்த அருண், சென்னை புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தனது முதல் பேட்டியிலேயே ரவுடிகளுக்கு ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சென்னையில் ரவுடிகளை களையெடுக்கும் பணி தொடங்கியது.
இந்த சிறப்பு சோதனையில் 77 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் நான்கு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி எச்சரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.