பெற்றோருடன் செல்ல விருப்பம்...இளமதி திடீர் திருப்பம் !
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த செல்வன் என்ற இளைஞரும், குருப்பநாய்க்கம்பாளையத்தை சேர்ந்த இளமதி என்ற பெண்ணும், ஒருவரையொருவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட நிலையில் இளமதி உறவினர்களால் அவர்கள் கடத்தப்பட்டனர். போலீசார் செல்வனை மீட்ட நிலையில் இளமதியை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்ட விவகாரம் குறித்து தர்மபுரி எம்.பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து இளமதி எங்கே என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இந்நிலையில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜர்படுத்தப்பட்டிருப்பதாய் செய்திகள் வெளியாகியுள்ளது. அவரை கடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டூர் காவல்நிலையத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜரான இளமதி பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.