முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

Siva

ஞாயிறு, 6 ஜூலை 2025 (16:37 IST)
உத்தரப்பிரதேசத்தில் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவரின் கல்விக் கட்டண விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியும், பள்ளி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்திருப்பது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
 
ஐ.ஏ.எஸ். அதிகாரியாகும் கனவுடன் படித்து வந்த ஏழாம் வகுப்பு மாணவி பன்குரி திரிபாதியின் தந்தை, ஒரு விபத்தில் காலில் காயம் அடைந்து வேலையை இழந்ததால், அவர்களின் குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், பள்ளிக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 18,000 கல்வி கட்டணத்தை அவர்களால் கட்ட முடியவில்லை. இதுகுறித்து அந்த மாணவி சமூக வலைத்தளங்கள் மூலம் முதலமைச்சரிடம் உதவி கோரியிருந்தார்.
 
இதையடுத்து, முதலமைச்சர், கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் கட்டணத்தை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதனையடுத்து, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அந்த மாணவியின் கல்விக்குத் தான் உதவுவதாக கூறினார். அதுமட்டுமின்றி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். "பன்குரியின் கல்வியை முதலமைச்சர் இனிமேலாவது காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது," என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.
 
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கல்வித் துறை அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட பள்ளியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்