காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்த முதல்வர்

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (19:13 IST)
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிராமத்தில், வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் இன்று (22.3.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருபூபதி (வயது 57), திரு.முருகன் (வயது 40), திருமதி.சசிகலா (வயது 35), திருமதி.தேவி (வயது 32), திரு.சுதர்சன் (வயது 31), திருமதி. வித்யா (வயது 30) மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் கடும் காயமடைந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
தலா 3 இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்