2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், பாஜக வேட்பாளராக முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை போட்டியிட மாட்டார் என பாஜக வட்டாரங்கள் கூறி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலைக்கு டெல்லியில் ஒரு முக்கிய தேசிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும், அதனால் அவர் டெல்லி அரசியலுக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் பிரச்சாரம் மட்டும் செய்வார் என்றும், எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தை தாண்டி அண்ணாமலைக்கு ஒரு மிகப்பெரிய பணி இருக்கிறது என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் அந்த பொறுப்பை ஏற்றார். இருப்பினும், அண்ணாமலை தமிழக தலைவராக இருந்ததைப்போல் தற்போது பாஜக ஆக்டிவாக இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலை அவ்வப்போது வெளியிடும் கருத்துகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த சூழலில்தான், 2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார் என்றும், தேர்தலுக்குப் பின்னர் அவர் தேசிய அரசியலுக்குச் சென்று விடுவார் என்றும், அவருக்கு ஒரு முக்கிய பதவி காத்திருக்கிறது என்றும் கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.