பணப் பட்டுவாடா அமோகம் - தஞ்சாவூர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைப்பு

Webdunia
திங்கள், 16 மே 2016 (08:00 IST)
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கவிருக்கும் நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

 
தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும் அதிமுக சார்பில் எம்.ரங்கசாமியும் தேமுதிக சார்பில் வி.ஜெயப்பிரகாஷும், பாமக சார்பில் குஞ்சிதபாதமும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில், 2 லட்சத்து 2 ஆயிரத்து 2 வாக்காளர்கள் உள்ளனர்.
 
இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் விநியோகம் செய்யப்படுவது தொடர்பாகவும் பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டிருப்பது குறித்து பல புகார்கள் எழுந்தன.
 
இதனை தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிக்கை அளித்திருப்பதை அடுத்து அந்தத் தொகுதியில் மே 16ஆம் தேதி தேர்தல் நடக்காது என்றும் அதற்குப் பதிலாக மே 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
அந்தத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே 25ஆம் தேதி நடக்கும். ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் பரிசுப் பொருட்களும் பணமும் விநியோகிக்கப்படுவதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பை ஞாயிறு இரவு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
இதனால், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் தவிர மற்றைய 234 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்