வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட வேண்டுமென்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன. வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும், அவர்கள் வசிக்கும் வளாகத்திற்கு வெளியே தங்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உத்தரவின் அடிப்படையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டுள்ளது.