பாஜகவை சேர்ந்தவர்களே தன்னை விமர்சிப்பதாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை சௌந்தராஜன் புகார் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் செயல்பாட்டுக்கு தமிழிசை பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
அடுத்த சில நாட்களில் ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அமித்ஷா கண்டித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிசைக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. இதனிடையே அமித்ஷா கண்டித்த சில நாட்களில் தமிழிசை சௌந்தரராஜனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் பங்கேற்ற தமிழிசை, பாஜகவை சேர்ந்தவர்களே தன்னை விமர்சிப்பது குறித்து கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம், சரமாரி புகார் தெரிவித்தார்.
இணையதளங்களில் பாஜக நிர்வாகிகளே ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துகளை பதிவிடுவதை தடுக்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் தமிழக பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.