தினகரனுக்கு பூஜ்யம் வந்தது ஏன்? தமிழிசை பதில்

Webdunia
திங்கள், 27 மே 2019 (07:14 IST)
நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியபோது, 'மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால் பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? மக்கள் அமமுகவுக்கு ஓட்டு போடவில்லை என்றே வைத்து கொள்வோம். எங்கள் கட்சியினர்களே கூட ஓட்டு போடவில்லை என்று வைத்து கொள்வோம். எங்கள் பூத் ஏஜண்டுக்கள் கூடவா ஓட்டு போடாமல் இருந்திருப்பார்கள்? எப்படி பூஜ்யம் வந்தது என்பதை தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும் என்று கூறினார்.
 
இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'அமமுகவின் முகவர்கள் ஏமாற்றினார்களா என தினகரன் ஆராய வேண்டும்' என்று கூறினார். தினகரன் கட்சியின் பூத் ஏஜண்டுகள் கூட அவருக்கு ஓட்டு போடாமல் அவரை ஏமாற்றிவிட்டதாகவும் இதுகுறித்து அவர் ஆராய்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளது தினகரன் கட்சியின் பூத் ஏஜண்டுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
மேலும் பாஜக தொண்டர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்பிய தமிழிசை, 'மோடி அரசு மதவாத அரசு என்றும், சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர் என்றும் குற்றச்சாட்டு கூறும் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களே இதற்கு என்ன பதில்? தூண்டுவது யார்,? துண்டாட துடிப்பது யார்? சாதியம் பேசி சாதிக்க நினைப்பவர்கள் யார்? யார் மக்கள் அறிவார்கள்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்