ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக் கோரி, தமிழகம் எங்கும் வலுப்பெறும் போராட்டத்தில் தமிழ் கவிஞர்களும் தற்போது குதிக்க உள்ளனர்.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரை அலங்காநல்லுர், அவனியாபுரம், பாலமேடு என தொடங்கிய இந்த போராட்டம் தமிழகமெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் எழுச்சிப் பேரவை சார்பில் இன்று மதியம் 12 மணிக்கு, சென்னை மெரினா கண்ணகி சிலையருகே, ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக களத்தில் குதிக்க உள்ளனர்.
இதில், கவிக்கோ அப்துல் ரகுமான். மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், இயக்குநர் யார் கண்ணன், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் உள்ளிட்ட கவிஞர்களும், தமிழறிஞர்களும், பங்கேற்கின்றனர்.