தமிழகத்தில் இன்று மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் அதிக வெப்பம் இருக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை தான் காணப்படும் என்றும், இன்றும் நாளையும் பகல் நேரத்தில் இயல்பை விட அதிகமாக வெப்பம் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை தான் காணப்படும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஓரளவு மேகமூட்டம் காணப்பட்டாலும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் என்ற நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடை காலம் தொடங்கி விட்டது போல் தெரிகிறது.
கடந்த சில நாட்களாக அதிகாலை வேளையில் பனிமூட்டம் இருந்தாலும், நண்பகல் நேரத்தில் நல்ல வெயில் அடிக்கிறது என்பதும், இதனால் கோடை காலம் ஆரம்பித்து விட்டதாகவே பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.