மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு இரு சமூகத்தினரிடையே வெடித்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்று நிலைமை சீராக தகுந்த நடவடிக்கை எடுத்தார். தற்போது, நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மணிப்பூர் நிலைமையை சரி செய்ய முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் பைரோன் சிங் அறிவித்திருந்தார். ஆனால், இன்னும் மாற்று முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை.
மேலும், முதல்வர் இல்லாத நிலையில், ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சட்டப்பேரவையை கூட்டினால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.