மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய துணை வட்டாசியரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மருளுக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய மின் இணைப்பை தன் பெயருக்கு மாற்றம் செய்ய, துணை வட்டாட்சியர் கார்த்திகேயனை அணுகியுள்ளார். கார்த்திகேயன் தடையில்லாச் சான்று வழங்க பழனியப்பனிடம் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து பழனியப்பன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர், பழனியப்பனை ரசாயனம் தடவிய பணத்தை கார்த்திகேயனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். வட்டாசியர் அலுவலகத்தில் வைத்து கார்த்திகேயனிடம் ரசாயனம் தடவிய நோட்டை பழனியப்பன் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கார்த்திகேயனை கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய துணை வட்டாசியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.